துரைப்பாக்கத்தில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்


துரைப்பாக்கத்தில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2019 10:30 PM GMT (Updated: 9 March 2019 7:04 PM GMT)

துரைப்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலை, பல்லாவரம்–துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துரைப்பாக்கத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதில் பள்ளி செல்லும் மாணவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்குவதால் பெரும் இன்னலுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

துரைப்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியை தவிர்ப்பதற்காகவே கனரக வாகனங்கள் பெரும்பாலும் துரைப்பாக்கம் விநாயகா நகர், சாய் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் வழியாக சுற்றிச்செல்வதால் அடிக்கடி அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே துரைப்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் 200–க்கும் மேற்பட்டோர், துரைப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ராஜீவ்காந்தி சாலையில் மட்டுமே சுங்கச்சாவடி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சட்டத்துக்கு புறம்பாக துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அரசு உடனடியாக அப்பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கோரி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

சுங்கச்சாவடியை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக போராடப்போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story