மீஞ்சூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் மறியல்
மீஞ்சூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி,
மீஞ்சூரை அடுத்த வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 22). எண்ணூரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். காலை 7 மணியளவில் வல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது கன்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷ்குமார் லாரி சக்கரத்தில் சிக்கினார்.
படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து 2 மணி தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் எண்ணூர்–வல்லூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
போலீசார் ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.