அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருவதாக ஓமலூரில் நடந்த அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அருகே ஓமலூர் காமலாபுரம் விமானம் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் ஓமலூரில் உள்ள புறநகர் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், கூட்டணி கட்சியான பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அக்கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இதனால் நமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரண்டு, மிரண்டுபோய் உள்ளார். இந்த மெகா கூட்டணியில் இன்னும் ஒருசில கட்சிகள் இணைய உள்ளது. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றனர்.
அதாவது, பாலில் ஒருதுளி விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். இதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும். நாம் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி வலிமையை தேர்தல் மூலம் நாம் உணர்த்த வேண்டும்.
ஏற்கனவே அ.தி.மு.க.வில் 37 எம்.பி.க்களும், பா.ம.க.வில் ஒரு எம்.பி.யும், பா.ஜனதா கட்சியில் ஒரு எம்.பி.யும் என மொத்தம் 39 எம்.பி.க்கள் கூட்டணியில் உள்ளனர். எனவே, இந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்த சந்தர்ப்பம் என்றைக்கும் கிடைக்காது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் மத்தியில் பலர் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் ஒரு மாத கால அவகாசமாக இருக்கும். எனவே, காலம் கடத்தாமல் அனைத்து வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டும். கூட்டணி இறுதியான பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஊழியர் கூட்டம் நடத்த உள்ளேன். இந்த கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும்.
ஏற்கனவே டாக்டர் அன்புமணி ராமதாஸ், மத்திய மந்திரியாக இருந்தபோது, தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். அதேபோல், இந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு தேவையான மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டுவர முடியும்.
சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 4 நாடாளுமன்ற தொகுதிகள் அடங்குகின்றன. ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியம். எனவே, நமது கூட்டணி கட்சி தொண்டர்கள் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் எவ்வாறு கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தலில் ஆதரவு திரட்ட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
கூட்டத்தில், எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story