தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,410 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,410 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 7:39 PM GMT)

பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,410 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்,

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) விஜயகாந்த் தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் தலைமை நீதித்துறை நடுவர் முரளதரன், சார்பு நீதிபதி ஸ்ரீரிஜா, மாவட்ட சட்ட ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனப்பிரியா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்ணையன், ராஜகோபால், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள வாரா கடன் பொறுத்த வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

இதில் 70 வங்கி வழக்குகளில் ரூ.65 லட்சத்து 70 ஆயிரத்து 300-க்கும், 75 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.2 கோடியே 70 ஆயிரத்து 402-க்கும் தீர்வு காணப்பட்டது. 14 சிவில் வழக்குகளில் ரூ.48 லட்சத்து 90 ஆயிரத்துக்கும், ஆயிரத்து 244 சிறு குற்ற வழக்குகளில் ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 900-ம் உள்பட மொத்தம் 1,410 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரத்து 364-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெறப்பட்ட வழக்கின், வழக்குதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயகாந்த் நஷ்ட ஈடு தொகைக்கான காசோலை களை வழங்கினார்.

இதில் வக்கீல் சங்க செயலாளர் சுந்தராஜன், வழக்கறிஞர் சங்க தலைவர் முகமது இலியாஸ் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் விஜயகுமாரி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி, மாவட்ட நீதிமன்ற சிரஸ்தார் வீரவிஜயன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர். 

Next Story