கோவில்பட்டியில் ரூ.50 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


கோவில்பட்டியில் ரூ.50 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 March 2019 4:45 AM IST (Updated: 10 March 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரூ.50 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி 28-வது வார்டு வெங்கடேஷ் நகரில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து அறிவியல் மையம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியின் கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணிக்கு வருகிறவர்களை எப்போதும் மதிப்போம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அ.தி.மு.க. கூட்டணி இறுதி வடிவம் பெறும். அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்களை தவிர தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கம்யூனிஸ்டு கட்சிகளின் உறுப்பினர்கள் இல்லாத சட்டசபை முதன்முதலில் அமைந்துள்ளது. மேலும் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த சட்டசபையில் இல்லை.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, தனித்து போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று, புதிய வரலாற்றை உருவாக்கினார். இந்த வெற்றியில் பங்கு கொள்ள யாருக்கும் உரிமை இல்லை.மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், அவர் ஆட்சிக்கு வந்தால் இலவச ஸ்கூட்டரும், குவாட்டரும் தர மாட்டேன் என்று கூறி உள்ளார். இது அவருக்கு அரசியல் பக்குவம் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, தாசில்தார் பரமசிவன், நகரசபை ஆணையாளர் அட்சயா, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story