வெப்பக்காற்று பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெப்பக்காற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலங்களில் வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கும் என்பதால் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதை தவிர்க்க அதிகளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்புக்கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு உப்புக்கரைசல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு வண்ண ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். வெயில் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளியே வரும் பட்சத்தில் குடையை எடுத்து செல்ல வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உரிய நீர் பானங்களை கையில் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் தங்களிடம் உள்ள கால்நடைகளை நிழல் தரும் இடங்களில் நிறுத்தி அதிக நீர் வழங்கிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டு செல்லக்கூடாது. கோடை காலங்களில் குறிப்பாக வெப்பம் அதிகமாக உள்ள நாட்களில் வளிமண்டல வெப்பம் மற்றும் உலர்ந்த வானிலை காரணமாக இயற்கையாகவே காட்டுத்தீ நிகழ வாய்ப்புள்ளது. எனவே கோடை காலங்களில் பொதுமக்கள் காட்டிற்குள் செல்ல வேண்டாம்.
வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, மயக்கம், உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவருக்கோ அல்லது ஆம்புலன்சுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். வெப்பக்காற்றால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்கள்- தகவல்களை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story