தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 593 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 593 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 8:06 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 593 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

இதில் தலைமை குற்றவியல் நீதிபதி அகிலாசாலினி, முதன்மை சார்பு நீதிபதி விஜயலட்சுமி, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் நாகராஜன், முனிக்குமார், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியன், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு 5 ஆயிரத்து 304 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 3 ஆயிரத்து 551 வழக்குகளில், 153 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 16 லட்சத்து 31 ஆயிரத்து 600-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 753 வழக்குகளில் 440 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 74 லட்சத்து 98 ஆயிரத்து 703-க்கு தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 593 வழக்குகளில் ரூ.4 கோடியே 91 லட்சத்து 30 ஆயிரத்து 303-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலக ஓய்வுபெற்ற நிர்வாக உதவியாளர் தங்கராஜ் மாரியப்பன், முதுநிலை நிர்வாக உதவி யாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story