ஆத்தூர் அருகே, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை


ஆத்தூர் அருகே, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2019 10:30 PM GMT (Updated: 9 March 2019 8:11 PM GMT)

ஆத்தூர் அருகே தூத்துக்குடியை சேர்ந்த அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர், 

தூத்துக்குடி நகரை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 52). இவர் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் வரி வசூல் ஊழியராக (பில் கலெக்டர்) பணியாற்றி வந்தார். சமீபத்தில் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சியில் வரி வசூல் ஊழியராக பணிபுரிந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை உதயசூரியன் ஒரு மொபட்டில் கீரிப்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர் கீரிப்பட்டியை அடுத்த மேல்தொம்பை என்ற பகுதியில் தனது மொபட்டை நிறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் அவர் அங்கு மொபட் மீது அமர்ந்தவாறே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கீரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யா மல்லியக்கரை போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரகுநாதன் அங்கு விரைந்து சென்று, உதயசூரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இறந்த உதயசூரியனுக்கு சுமதி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

உதயசூரியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உதயசூரியனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.

இது தொடர்பாக உடற்கூறு பரிசோதனைக்காக அவரது உடலின் பாகங்கள் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது, அதன் அறிக்கை வந்த பிறகுதான் உதயசூரியன் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story