நகராட்சி அதிகாரிகள், மனசாட்சிப்படி பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுரை


நகராட்சி அதிகாரிகள், மனசாட்சிப்படி பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுரை
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 9:12 PM GMT)

நகராட்சி அதிகாரிகள், மனசாட்சிப்படி பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர்,

கடலூர் நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை சமீபத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த கட்டிடத்தை அமைச்சர் எம்.சி.சம்பத், கலெக்டர் அன்புசெல்வனுடன் நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அங்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இந்த ஆய்வுக்கூட்டத்துக்கு பல ஊழியர்கள் வராததை கவனத்தில் கொண்ட கலெக்டர் அன்பு செல்வன், துறைவாரியாக எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? எத்தனை பேர் பணிக்கு வந்துள்ளனர்? பணிக்கு வராதவர்கள் விடுப்பு கடிதம் கொடுத்து உள்ளார்களா? என்று சரமாரியாக கேள்வி கேட்டார். அவரது கேள்விகளுக்கு நகராட்சி அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. இதனால் இக்கூட்டம் முடிந்ததும் ஊழியர்களின் வருகைப்பதிவேட்டை தன்னிடம் காண்பிக்க வேண்டும் என்று ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில், அமைச்சரின் ஆய்வுக்கூட்டத்துக்கு ஊழியர்கள் வராதது மோசமான முன்னுதாரணம். நகராட்சியின் மிக, மிக மோசமான நிலைக்கு இது தான் காரணம். இதற்கு நான் தான் முழு பொறுப்பு என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

பின்னர் குடிநீர் வினியோகம், சுகாதாரப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வரி வசூல் போன்றவை பற்றி அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:–

கோடை காலமும், தேர்தலும் வருவதால், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். கடலூருக்கு குடிநீர் வழங்குவதற்காக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடலூரில் கொசுக்கடி அதிகமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் 4 ஆயிரம் இணைப்புகள் கொடுத்திருப்பது போதுமானது இல்லை. இப்படியிருந்தால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு எப்படி பணம் கட்ட முடியும், வாங்கிய கடனை எப்படி அடைக்க முடியும்?

நகரம் முழுசுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

துப்புரவு ஆய்வாளர்கள் வேலை பார்ப்பதே இல்லை, இது உங்கள் ஊராக இருந்தால் இப்படியிருப்பீர்களா? மனசாட்சிப்படி பணியாற்றுங்கள். கொசுமருந்து அடியுங்கள். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடியுங்கள். வரி வசூல் ரொம்ப குறைவாக உள்ளது. எப்படிக்கேட்டால் மக்கள் வரி கொடுப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதன்படி செயல்படுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

பின்னர் நகராட்சி அலுவலக வளாகத்தை பார்வையிட்ட அவர், புதிய கட்டிடம் அருகே உள்ள பழமையான மா மரத்துக்கு உரம் வைத்து, தண்ணீர் ஊற்றி பராமரிக்குமாறு ஆணையாளர்(பொறுப்பு) அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிட்டார்.

வார்டுகளுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாத நாட்களில் உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்குமாறு உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தூக்கனாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகத்தினை வழங்கினார்.

பின்னர் மேல அழிஞ்சிப்பட்டு காலனியில் ரூ.18 லட்சத்து 55 ஆயிரம் செலவில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.


Next Story