தொண்டி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி 3 பேர் படுகாயம்
தொண்டி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள ஏ.மணக்குடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா என்ற சுரேஷ் (வயது 29). இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் தொண்டி கிழக்கு தெரு அமீர்அலி மகன் செய்யது இப்ராகிம் (30), முகமது ராசிக் மகன் முகமது ரிபாக் (24), சேகு உதுமான் மகன் அபுல்கலாம் ஆசாத் (23), சபூர் மைதீன் மகன் முகமது அப்ரித் (30), முகமது சேட் மகன் அஸ்பாக்(25) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் சென்று சினிமா பார்த்து விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 2.10 மணியளவில் நம்புதாளை மீனவர் சாலை அருகே ஒரு வளைவில் வாகனம் திரும்பியபோது தொண்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் சரக்கு வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இருந்த 6 பேரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
அப்போது பஸ் பயணிகள் கத்தி கூச்சல் போட்ட சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், தொண்டி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் காமாட்சிநாதன், பெரியசாமி, தனிப்பிரிவு ஏட்டு ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் டிரைவர் கருப்பையா என்ற சுரேஷ், செய்யது இப்ராகிம், அபுல்கலாம் ஆசாத் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முகமது ரிபாக், அஸ்பாக், முகமது அப்ரித் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த 3 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நம்புதாளை மேலத்தெரு அல்லாப்பிச்சை மகன் அஜ்மல்கான் என்பவர் தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் வேடம்பட்டி கோபால் மகன் சின்னத்தம்பி என்பவரை கைது செய்தனர். இந்த விபத்தின் போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி தப்பினர். இறந்த கருப்பையா என்ற சுரேஷ் மற்றும் அபுல்கலாம் ஆசாத் ஆகிய இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. செய்யது இப்ராகிம் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். விபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து நடந்த இடம் ஆபத்தான வளைவு ஆகும். இப் பகுதியில் எச்சரிக்கை செய்யும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.