விருதுநகர்– சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி முடக்கம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


விருதுநகர்– சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி முடக்கம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
x
தினத்தந்தி 10 March 2019 3:46 AM IST (Updated: 10 March 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்–சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லாததால் முடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2008–ம் ஆண்டில் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு ஆட்சி காலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு, அதற்காக விருதுநகர்–சாத்தூர் இடையே 2,500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில் முன்னணி தனியார் நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் அமைக்க முன்வந்தன. ஆனால் திடீரென்று இந்த திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அதே இடத்தில் உற்பத்தி முதலீட்டு மையம் தொடங்க மத்திய வணிகத்துறை அமைச்சகம் முன்வந்த நிலையில் தமிழக அரசு பரிந்துரைக்காததால் அந்த திட்டமும் நிறைவேறவில்லை.

இதனையடுத்து மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர்–சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக 2,500 ஏக்கர் நிலம் கண்டறிய சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி தகவல், வருவாய் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் 2,500 ஏக்கர் நிலம் கண்டறிந்தனர். பின்னர் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசின் தொழில் துறை மேற்கொண்டது. மேலும் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் நிலம் கையகப்படுத்தும் பணி முடக்கம் அடைந்துள்ளது. இதனால் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியில் அடுத்தகட்ட நடவடிக்கையில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களை போன்று தற்போதும் இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கும் பணி முற்றிலும் முடங்கிவிடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, தொழிற்பேட்டை அமைக்கும் விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story