கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி ‘இந்திய சிறையில் இருந்த மசூத் அசாரை விடுதலை செய்தது யார்?’
கர்நாடக மாநிலம் ஹாவேரியில் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “புலவாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை முன்பு இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்தது யார்? என்று பிரதமர் மோடிக்கு கேள்வி விடுத்தார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
ராகுல்காந்தி கர்நாடகம் வருகை
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக முதல் முறையாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று கர்நாடகம் வருகை தந்தார்.
இதற்காக அவர், தனி விமானத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் உப்பள்ளிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹாவேரி மாவட்டத்திற்கு ராகுல்காந்தி சென்றார். பின்னர் ஹாவேரி டவுனில் உள்ள பள்ளி மைதானத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
“கடந்த 5 ஆண்டு களாக பிரதமர் மோடி சில பெரிய கம்பெனிகளின் நலனுக்காகவே பணியாற்றியுள்ளார். இந்த சமுதாயத்துக்கோ, சிறிய, நடுத்தர வர்த்தகர்களுக்கோ ஒன்றும் செய்யவில்லை. ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி அம்பானிக்கு வழங்கப்பட்டதுடன், பிரான்ஸ் அதிபரையும் இந்த நிறுவனத்தை அரசு நிறுவனத்துக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும்படி நிர்ப்பந்தித்துள்ளார்.
குறைந்தபட்ச வருமானம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ஒரு சட்டம் கொண்டுவரப்படும். பிரதமர் மோடி பணத்தை எடுத்து பெரிய நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் போடும்போது, நாம் ஏன் கோடிக்கணக்கான வேலை இல்லாத இளைஞர்களுக்கு அதனை செய்யமுடியாது.
நமது இந்த திட்டத்தை கேட்டதும் பயந்துபோன பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ஒரு குறைந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். பிரதமரின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெரிதும் பாதிக்கப்பட்டான். அதை நாம் திரும்பப்பெற முடியாது.
ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே வரியாக மிகவும் எளிமையான ஜி.எஸ்.டி. கொண்டுவரப்படும். என்னுடைய முதல் உரிமை பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவது தான்.
ரூ.30 ஆயிரம் கோடி ஊழல்
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. அனில் அம்பானி கடனில் சிக்கி தவிப்பதால், ரூ.30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ரபேல் ஊழல் மூலம் வழங்கியுள்ளார். ரூ.600 கோடி மதிப்பிலான போர் விமானத்தை ரூ.1,600 கோடி கொடுத்து வாங்கியது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். ரபேல் போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு போர் விமானத்தையாவது அனில் அம்பானி நிறுவனம் தயாரித்துள்ளதா?. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரபேல் முறைகேடு குறித்து பிரதமரிடம் 4 கேள்விகளை கேட்டேன்.
ரூ.600 கோடி மதிப்புள்ள விமானத்தை ரூ.1,600 கோடிக்கு எதற்காக வாங்கினீர்கள்? எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு ரபேல் போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்காதது ஏன்?, அனில் அம்பானிக்கு ரபேல் போர் விமானத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியது ஏன்?. இதுவரை வரை ஒரு விமானத்தையாவது அவர் தயாரித்து கொடுத்துள்ளாரா? என்று கேட்டேன். அந்த 4 கேள்விக்கும் இதுவரை பிரதமர் பதில் சொல்லவில்லை. என்னை நேருக்கு நேர்நேராக பார்த்து பேசுவதற்காக நாடாளுமன்றத்தில் பிரதமர் அஞ்சினார்.
மசூதை விடுவித்தது யார்?
புலவாமா தாக்குதலுக்காக பிரதமர் மோடி மசூத் அசாரை குற்றம்சாட்டினார். 1999-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் தான் மசூத் அசார் இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ராணுவ விமானத்தில் ஆப்கானிஸ்தானின் காந்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதைப்பற்றி பிரதமர் மோடி ஏன் பேசுவதில்லை?
40 மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான நபரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது பா.ஜனதா தான் என்பதை ஏன் நீங்கள் பேசுவதில்லை? நாங்கள் உங்களைப்போல (மோடி) இல்லை. நாங்கள் பயங்கரவாதத்துக்கு தலைவணங்கவில்லை. மசூத் அசாரை யார் விடுவித்தது என்பதை இந்திய மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
(1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின்போது கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை மீட்க மசூத் அசார் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராகுல்காந்தி வருகையையொட்டி ஹாவேரியில் பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story