உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்


உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 10 March 2019 3:53 AM IST (Updated: 10 March 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்டது கல்யாணிபட்டி. இந்த கிராமத்தில் ஒரு பகுதியில் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கும், யூனியன் அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஓரிரு நாளில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் அதிகாரிகள் கூறியபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கல்யாணிபட்டி கிராம மக்கள் நேற்று குடிநீர் சீராக வழங்கக்கோரி முக்குச்சாலை லிங்கபுரத்தில் உள்ள விக்கிரமங்கலம்–உசிலம்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி தாசில்தார் சிவராம், உத்தப்பநாயக்கனூர் போலீசார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கிராம மக்கள் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினர். இதனையடுத்து, தாலுகா அலுவலகத்தில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று தாசில்தார் உறுதியளித்தார். அதன்பிறகு சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story