சாம்ராஜ்நகர் டவுனில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திடீர் ‘தீ’ மனைவியுடன் போலீஸ்காரர் காயம்
சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் போலீஸ்காரர் தனது மனைவியுடன் காயமடைந்தார்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் போலீஸ்காரர் தனது மனைவியுடன் காயமடைந்தார்.
திடீர் ‘தீ’
சாம்ராஜ்நகர் டவுன் புவனேஸ்வரி சர்க்கிளில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு மோட்டார் ைசக்கிளுக்கு ஊழியர் ஒருவர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ெபட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள பெட்ரோல் டேங் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் மற்றும் அங்கு பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் அங்கிருந்து ஓடினார்கள்.
கொழுந்துவிட்டு எரிந்தது
இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களுடன் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு மளமளவென பெட்ரோல் விற்பனை நிலையம் முழுவதும் பரவி எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து சாம்ராஜ்நகர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் அதற்குள் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் எரிந்து சாம்பாலானது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
2 பேர் காயம்
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீப்பிடிப்பதற்கு முன்பாக போலீஸ்காரர் வசந்த்குமார் என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர்கள் மீது தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதில் அவர்களுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story