திருப்பரங்குன்றம் அருகே சாலையே போடவில்லை; அமைத்ததாக தகவல் பலகை கிராம மக்கள் அதிர்ச்சி
திருப்பரங்குன்றம் அருகே சாலையே போடாமல், சாலை அமைத்ததாக வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ளது, சூரக்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரில் 90 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் விளையும் காய்கறிகளை மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். இதனால் தங்களது ஊராட்சிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே ஏற்கனவே சூரக்குளத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களும் சரிவர வருவதில்லை. காரணம், அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக படுமோசமாக காணப்படுகிறது என்கின்றனர். பஸ்கள் இயக்கப்படாததால் இப்பகுதி விவசாயிகள், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சாலையை செப்பனிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று சூரக்குளம் கிராமத்தில் 2 இடங்களில் தகவல் பலகை வைக்கப்பட்டது. அதில் ஒரு பலகையில் சூரக்குளம்–நிலையூர் வரை ரூ.14½ லட்சத்தில் சாலை போடப்பட்டுள்ளது என்றும், இதேபோல் மற்றொரு பலகையில் சூரக்குளம்–பரம்புபட்டி இடையே ரூ.51 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ளபடி பணிகள் இன்றும் முடியாத நிலையில் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் பலகைகளை பார்த்த கிராம மக்கள் சிலர் சாலையே போடாமல், போடப்பட்டுள்ளதாக வைக்கப்பட்ட தகவல் பலகை அருகே நின்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.