சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் மற்றொரு வழக்கில் சிறுமியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில்
சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கியவருக்கு விரார் கோர்ட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மற்றொரு சிறுமி கற்பழிப்பு வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.
பால்கர்,
சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கியவருக்கு விரார் கோர்ட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மற்றொரு சிறுமி கற்பழிப்பு வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.
மிரட்டி கற்பழிப்பு
பால்கர், நாலச்சோப்ராவில் உள்ள விஜய் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் சர்மா(வயது39). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார். மேலும் சம்பவத்தை வெளியே கூறினால் பல்வேறு விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும் என சிறுமியை மிரட்டினார். இதனால் பயந்து போன சிறுமி, சம்பவத்தை வெளியே கூறவில்லை.
இந்த நிலையில் கற்பழிப்புக்கு ஆளான சிறுமி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறி சிறுமி கதறி அழுதார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ரமேஷ்குமார் சர்மா மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வசாய் செசன்ஸ் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கோர்ட்டு விசாரணையில் ரமேஷ்குமார் சர்மா மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து நீதிபதி அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
7 ஆண்டு கடுங்காவல்
இதேபோல் பிவண்டியில் உள்ள காமத்கார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ராஜாராம் (38). இவர் தனது பக்கத்துவீட்டை சேர்ந்த 5 வயது சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று மிரட்டி கற்பழித்து, காயப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் ராஜாராமை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்மீது மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் அவர் தவறு செய்தது உறுதியானதை அடுத்து நீதிபதி அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story