வத்தலக்குண்டு அருகே காரில் புலித்தோல் கடத்தல்? - 2 பேரை பிடித்து விசாரணை


வத்தலக்குண்டு அருகே காரில் புலித்தோல் கடத்தல்? - 2 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 10 March 2019 4:58 AM IST (Updated: 10 March 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே காரில் புலித்தோல் கடத்தி வந்ததாக 2 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவை சேர்ந்தவர் மனோகர் (வயது 45). தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் விஜய். கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் மேத்யூஸ் (53). இவர்கள் 3 பேரும், கேரள மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரில் புலித்தோலை கடத்தி செல்வதாக கொச்சியை சேர்ந்த மத்திய வன உயிரின குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மத்திய வன உயிரின குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன், போலீஸ்காரர்கள் ஆனந்த், ரெங்கசாமி மற்றும் வத்தலக்குண்டு வனக்காப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் உள்ள தனியார் பேக்கரி கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மனோகர், மேத்யூஸ், விஜய் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் மத்திய வன உயிரின குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, அவர்கள் 3 பேரும் சேர்ந்து திடீரென மத்திய வன உயிரின குற்றப்பிரிவு போலீசாரை இரும்புகம்பியால் தாக்கினர். இதில் குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் ஆனந்த், ரெங்கசாமி ஆகியோர் காயமடைந்தனர். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் மதிவாணன், வனக்காப்பாளர் முத்துக்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து மனோகரை பிடித்துக் கொண்டனர்.

மேத்யூஸ், விஜய் ஆகியோர் காரை எடுத்துக் கொண்டு தேனி நோக்கி சென்றனர். இதுகுறித்து காட்ரோடு சோதனைச்சாவடியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த மேத்யூசை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே புலித்தோலுடன், இடையில் காரில் இருந்து விஜய் இறங்கி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து பிடிபட்ட மேத்யூஸ், மனோகரிடம் வத்தலக்குண்டு வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.


Next Story