3½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


3½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 March 2019 11:00 PM GMT (Updated: 10 March 2019 1:27 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வேலூரில் நடந்த முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர், 

நாடு முழுவதும் இளம் பிள்ளைவாதம் என்னும் போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு 2 ஆயிரத்து 387 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூர் சலவன்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முகாமிற்கு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், மாநகராட்சி மருத்துவ அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மற்ற முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது.

இதில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் சந்திரபாபு, செயலாளர் பாண்டியன், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் என 73 முகாம்களிலும், போக்குவரத்து வசதி குறைவான மலைபகுதிகளில் 18 முகாம்களிலும் தேசிய நெடுஞ்சாலையோரம் 3 முகாம்கள் உள்பட 2,387 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணியில் 8 ஆயிரத்து 158 பணியாளர்களும், 251 மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

முகாம்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அடங்கிய குழுவினர் வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்தை இந்த வாரத்துக்குள் வழங்குவார்கள். வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story