மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி பற்றி கடும் விமர்சனம்: நடிகை விஜயசாந்திக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் + "||" + Criticism about Prime Minister Modi: Actress Vijayasanthi condemned Ponadarakrishnan

பிரதமர் மோடி பற்றி கடும் விமர்சனம்: நடிகை விஜயசாந்திக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

பிரதமர் மோடி பற்றி கடும் விமர்சனம்: நடிகை விஜயசாந்திக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சித்த நடிகை விஜயசாந்திக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கட்டப்படும் சாலைகள் மற்றும் பாலங்களின் உறுதித்தன்மை, மண்ஆய்வு, பணிமுடிந்த வேலைகளின் தரம் போன்றவற்றை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்யும் வசதிகொண்ட தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.


பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கன்னியாகுமரியில் துறைமுகம் கொண்டு வர துறைமுக நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. சிலர் வேண்டுமென்றே துறைமுகத்திற்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள். கன்னியாகுமரியில் துறைமுகம் வந்தே தீரும். துறைமுகத்தின் மூலம் மீனவர்கள் பலன் அடைவார்கள். துறைமுக எதிர்ப்பாளர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

தமிழகத்தை சேர்ந்த 37 எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்ற பிரேமலதாவின் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து உள்ளார். இதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

கன்னியாகுமரி தொகுதியில் 1½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பா.ஜனதா வெற்றி பெறும். மக்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். எந்த மக்களையும் எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது. பா.ஜனதா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும்.

குமரி மாவட்ட பிரஜை என்ற முறையில் ராகுல்காந்தி கன்னியாகுமரிக்கு வருவதை வரவேற்கிறேன். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் புதிய ஒளியை அவர் பாய்ச்சுவாரா என்று கேட்கிறீர்கள். அவர் அதன்மூலம் மய்யத்தை (கட்சி) கண்டுபிடிப்பார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். திறப்பு விழா நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவிகோட்ட பொறியாளர்கள் யூஜின், காசி விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் சுசீந்திரம் அருகே ரூ.23.90 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– சுசீந்திரம் பகுதி மக்களும், இங்கு வரும் பிற மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் ஏற்கனவே ரூ.10 கோடியில் பாலம் கட்டப்பட்டது. தற்போது ரூ.23.90 கோடியில் புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வழிச்சாலையும் சுசீந்திரம் அருகே அமைகிறது.

ராகுல்காந்தி பங்கேற்ற கூட்டத்தில் பேசிய நடிகை விஜயசாந்தி, பிரதமர் மோடியை பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது.  

ரஜினிகாந்தின் ஆதரவை பா.ஜனதா கேட்குமா? என்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. என்னை பொருத்தவரை ரஜினிகாந்த் மக்கள் ஆதரவை பெற்ற ஒரு மாபெரும் மனிதர்.

இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட பா.ஜனதா தலைவர் முத்துகிருஷ்ணன், துணை தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் தேவ், பொருளாளர் உடையார், கோட்ட இணை பொறுப்பாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ஜெகநாதன், முன்னாள் நகர தலைவர் ராஜன், கோட்ட பொறியாளர் தனசேகரன், செந்தில்குமார், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.