மாவட்டத்தில் 3.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் 3.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 10 March 2019 8:11 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 3.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாமை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

சேலம், 

போலியோ இல்லாத உலகை உருவாக்கும் வகையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. சேலம் மாவட்டத்திலும் இந்த முகாம் அரசு மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நடந்தது.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள குமாரசாமிபட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை, கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் முகாம் ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:–

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருந்தகங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சேலம் மாநகராட்சி பகுதிகள் என 3,612 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

ஏற்காட்டில் 6 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும், அயோத்தியாப்பட்டணம், வீரபாண்டி மற்றும் எடப்பாடி பகுதிகளில் தலா ஒரு நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் சுங்கச்சாவடிகள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் 77 போக்குவரத்து முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

3 நாட்களுக்கு 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்த முகாமில் மொத்தம் 10 ஆயிரத்து 57 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 89 குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து கொடுத்து, தங்கள் குழந்தைகளை போலியோ நோயில் இருந்து பாதுகாப்பதுடன் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், சக்திவேல் எம்.எல்.ஏ., மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story