நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் சேலத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் சேலத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி
x
தினத்தந்தி 10 March 2019 10:15 PM GMT (Updated: 10 March 2019 2:56 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சேலத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

சேலம், 

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் நுகர்வோர் தின விழா சேலத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு அரசு மாநில தகவல் ஆணையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வேடியப்பன், கன்ஸ்யூமர் வாய்ஸ் நிறுவன தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். பின்னர் நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என 2 ஆண்டு காலமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத ஒரு சூழ்நிலையில் யார்? யாரோ? அரசியல் பேசுகிறார்கள். தி.மு.க.வில் கருணாநிதி இல்லாமல் கட்சி திணறுகிறது. தே.மு.தி.க.வை பொறுத்த வரைக்கும் விஜயகாந்த் இருந்தும் இல்லாத நிலை. அரசியல் கட்சிகளில் சரியான தலைமை இல்லாமல் திணறி வருகின்றனர்.

ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு இல்லாததால் தான் எல்லோரும் கூட்டணியை அதிகமாக பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மக்களைப்பற்றி யோசிக்காமல் கட்சிகளுக்குள் குதிரை பேரம் பேசி வருவது வெட்கக்கேடான நிலை. 21 தொகுதி இடைத்தேர்தல் தான் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும்.

பா.ம.க. 2 நாட்களுக்கு முன்பு வரை அடிமைகள், அறிவில்லாதவர்கள் என பேசி விட்டு அடுத்த நாளே விருந்துக்கு அழைக்கின்றனர். இவர்களும் சென்று சாப்பிட்டு விட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலினை சின்னபையன் எனவும், கருணாநிதியை விமர்சனம் செய்து விட்டும் வைகோ தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். பாகுபாடு இல்லாமல் எதிரிகளை தன்வசம் சேர்த்து கொள்கின்றனர் என தோன்றுகின்றது.

தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்ப்பதற்கு இரு தரப்பிலும் முனைப்பாக இருப்பதற்கு காரணம் இந்த தேர்தலை பொறுத்தவரை தேர்வு என்று நினைக்கிறார்கள். ஒரு மார்க்கில் தோல்வியடைந்து விடுவோமோ என்று பயந்து, ஒரு மார்க்கிற்காக இருக்கக்கூடிய தே.மு.தி.க.வை இரு பக்கத்திலும் பத்திரப்படுத்த நினைத்து தற்போது தி.மு.க. விலகி விட்டது. இப்போது இருக்கும் சூழலில் தே.மு.தி.க.வுக்கு வேறு வழியில்லை.

கமல்ஹாசன் நடிகர் என்பதை தாண்டி புதிய தலைவர் என்று பார்க்க வேண்டும். ஒரு புதிய அலையாக கமல் வந்துள்ளார். இவர் அரசியலில் கறை படியாத ஒரு புதிய வரவு. நடிகர் ரஜினிகாந்த் புலவாமாவில் நடந்ததை போர் என நினைக்காமல், தமிழ்நாட்டில் நடந்தால்தான் போர் என நினைக்கிறார். நான் நேரடி அரசியலுக்கு வருவதை விட வெளியில் இருந்து சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story