2,026 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
2,026 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நல பணிகள் இணை இயக்குனர் பாண்டியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் மீரா (திருவண்ணாமலை), கோவிந்தன் (செய்யாறு), காசநோய் பிரிவு துணை இயக்குனர் அசோக், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கஜேந்திரன், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மூலம் தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நடக்கிறது. முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 2 லட்சத்து 29 ஆயிரத்து 114 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 26 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம், 7 ஆயிரத்து 459 சுகாதாரம், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு நடத்தப்படுகிறது.
மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், எளிதில் செல்ல முடியாத குக்கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளிலும் நடமாடும் முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொள்ளாத விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஒரு குழந்தை கூட விடுபடாது அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story