ஆம்பூரில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் அதிகாரிகள் நடவடிக்கை
ஆம்பூரில் சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே நாச்சார்குப்பம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அவரது தாய்மாமன் குமார் (வயது 26) என்பவருக்கும் நேற்று காலை ஆம்பூர் பெருமாள் கோவில் பின்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை - பெண் அழைப்பு நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.
சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து வேலூர் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பைரவி மற்றும் அதிகாரிகள், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திருமணம் நடக்க இருந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தனர். பின்னர் இருவீட்டாரிடம் அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
திருமணம் நிறுத்தப்பட்ட தகவல் அறிந்ததும் இரு வீட்டாரின் உறவினர்களும் அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story