மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 10 March 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 20 பள்ளிக்கூடங்களில் 1,089 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக கோபி அருகே முருகன்புதூரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 15 லட்சத்து 40 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் 10 கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதிகளுடன் வருகிற மே மாத இறுதிக்குள் செய்து தரப்படும். 1,300 பள்ளிகளுக்கு தலா ரூ.18 லட்சம் செலவில் சோதனை கூட வசதி செய்யப்படும்.

பாடத்திட்டங்கள் மாற்றம் தமிழ்நாட்டில் 8 மாதங்களில் செய்து முடித்துள்ளோம். கோடை காலத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இதில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து ஏதேனும் புகார்கள் வந்தால், அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவன் மட்டும் படிக்கும் பள்ளிகள் 33-ம், 9 பேர்கள் படிக்கும் பள்ளிகள் 123-ம் உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு புதிதாக 4 செட் வண்ண சீருடைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின் போது அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பிசுப்பிரமணியம், கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story