விக்கிரவாண்டி அருகே, விளை நிலத்தில் அடுத்தடுத்து 13 மாடுகள் சுருண்டு விழுந்து சாவு - எலி மருந்து தெளித்த புற்களை மேய்ந்ததால் விபரீதம்


விக்கிரவாண்டி அருகே, விளை நிலத்தில் அடுத்தடுத்து 13 மாடுகள் சுருண்டு விழுந்து சாவு - எலி மருந்து தெளித்த புற்களை மேய்ந்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 11 March 2019 4:45 AM IST (Updated: 11 March 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே விளைநிலத்தில் அடுத்தடுத்து 13 மாடுகள் சுருண்டு விழுந்து செத்தன. எலி மருந்து தெளித்த புற்களை மாடுகள் மேய்ந்ததால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே வி.நல்லாளம், கீழ்வைலாமூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் சிலர் தங்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட மாடுகளை நேற்று முன்தினம் வி.நல்லாளம் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நெல் அறுவடை செய்யப்பட்ட வயலில் மேய்ச்சலுக்காக விட்டனர்.

பின்னர் மாலை கீழ்வைலாமூரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான 4 மாடுகளும், அவரது தம்பி சின்னப்பன் என்பவருக்கு சொந்தமான 3 மாடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து செத்தன. இதையறிந்த ஆரோக்கியசாமி, சின்னப்பன் ஆகியோர் தங்களது மாடுகளை பார்வையிட்டபோது மாடுகளின் வாயில் பூச்சி மருந்து வாடை வீசியது.

இதேபோல் அங்கு மேய்ச்சலுக்கு விட்டிருந்த வி.நல்லாளத்தை சேர்ந்த சவரிமுத்து என்பவருடைய 6 மாடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பரிதாபமாக செத்தன. மேலும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மாடுகளும் மயங்கி விழுந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த மாடுகளின் உரிமையாளர்கள் இதுபற்றி கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும், பெரியதச்சூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாடுகள் மேய்ந்த நெல் அறுவடை செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் சாகுபடி செய்த நெற்பயிரை எலிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரப்பு மற்றும் எலி வலைகள் வைத்த இடங்களில் எலி கொல்லி மருந்து தெளித்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிரை அறுவடை செய்ததாகவும் கூறினார். எலியிடம் இருந்து பயிரை காப்பாற்ற தெளிக்கப்பட்ட இடங்களில் இருந்த புற்களை தின்ற 13 மாடுகள் உயிரிழந்திருப்பதும், 20-க்கும் மேற்பட்ட மாடுகள் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே மயங்கி விழுந்த 20-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story