வேலை தேடி கோவை வந்த போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் - அபாய சங்கிலியை இழுத்து நண்பர்கள் மீட்டனர்
வேலை தேடி கோவை வந்த போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை அபாய சங்கிலியை இழுத்து நண்பர்கள் மீட்டனர்.
வேடசந்தூர்,
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 22). இவர், வேலை தேடி தனது நண்பர்களு டன் கோவைக்கு நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். ரெயிலில் கூட்டமாக இருந்ததால், சின்ராஜ் படியில் அமர்ந்து இருந்தார்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு-கோவிலூர் இடையே பிடாரியம்மன் கோவில் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சின்ராஜ் படியில் இருந்தபடியே தூங்கியதாக தெரிகிறது. அப்போது திடீரென அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதைக்கண்ட அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. ஆனால் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ரெயில் சென்று விட்டது. அதன்பின்னர் ரெயிலை விட்டு கீழே இறங்கிய நண்பர்கள் விபத்து நடந்த இடத்துக்கு ஓடி வந்தனர்.
பின்னர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சின்ராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விசாரணைக்கு பிறகு ரெயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story