நெல்லை அருகே பயங்கரம் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை
நெல்லை அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்,
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் கெங்கை பாண்டி (வயது 23). இவர் மாறாந்தை அருகே உள்ள சோலார் பவர் பிளாண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக் கிளை நெல்லையில் சர்வீஸ் செய்ய கொடுத்திருந்தார்.
அதனை வாங்குவதற்காக கெங்கை பாண்டி நேற்று மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்றார். அங்கு கெங்கை பாண்டி தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடன் நண்பர்கள் இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டி பகுதியில் வந்தபோது, கெங்கை பாண்டியின் செல்போனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பெண்ணிடம் செல்போனில் பேசினார். பின்னர் தனது நண்பர்கள் இருவரையும் ஊருக்கு செல்லுமாறும், தான் மீண்டும் நெல்லைக்கு சென்றுவிட்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து அவரது நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதன்பின்னர் கெங்கை பாண்டி நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நெல்லை அபிஷேகப்பட்டியை அடுத்த வெள்ளாளன்குளம் விலக்கு அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளினர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கெங்கை பாண்டியை, மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கெங்கை பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சுபாஷினி ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிடந்த கெங்கை பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.
இச்சம்பவம் தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடுகப்பட்டியை சேர்ந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கெங்கை பாண்டியின் செல்போனில் பேசியவர் யார்? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story