நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க.வின் பலத்தை நிரூபிப்போம் விஜயபிரபாகரன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க.வின் பலத்தை நிரூபிப்போம் விஜயபிரபாகரன் பேச்சு
x
தினத்தந்தி 11 March 2019 4:00 AM IST (Updated: 11 March 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க.வின் பலத்தை நிரூபிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறினார்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் குன்னம் அருகே உள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல்வாடி, எழுமூர், சித்தளி ஆகிய கிராமங்களில் கட்சி கொடி ஏற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இங்கு கூடி இருக்கும் இளைஞர்கள் பட்டாளத்தை பார்க்கும் போது பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் காலங்களில் தே.மு.தி.க. மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கேப்டன் விஜயகாந்த் எனக்கும் தலைவர் தான். அதன் பின்னர் தான் என் தந்தை. தற்போது தலைவர் நலமாக உள்ளார். விரைவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவரே நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார். யாரெல்லாம் தே.மு.தி.க.வை ஏளனமாக நினைக்கிறார்களோ அவர்களுக்கு முன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் பலத்தை நிரூபிப்போம். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நம்மை பற்றி பேசியதில் தே.மு.தி.க. வின் திருஷ்டி கழிக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில மாணவரணி செயலாளர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல், மாவட்ட துணை செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story