கோவையில் பரபரப்பு, நகை பறிக்க வந்த வாலிபரை சண்டையிட்டு பிடித்த பெண்
கோவையில் நகை பறிக்க வந்த வாலிபரை பெண் ஒருவர் சண்டையிட்டு பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை காந்திபுரம் லஜபதிராய் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி காளியம்மாள் (வயது37). இவர்கள் பேக்கரி கடை நடத்தி வருகிறார்கள். நேற்று காலை 8.30 மணியளவில் காளியம்மாள் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர், காளியம்மாள் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காளியம்மாள் நகையை பறிக்க விடாமல் அந்த வாலிபருடன் போராடினார். ஆனாலும் அந்த வாலிபர் நகையை பறித்து செல்வதில் குறியாக இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காளியம்மாள், அந்த வாலிபரை கீழே தள்ளி சண்டையிட்டு நகையை பறிக்க விடாமல் போராடினார்.
இதற்கிடையில் காளியம்மாளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே நகை பறிக்க முயன்ற வாலிபர் தப்பி ஓட முயன்றார். உடனே அந்த வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் காளியம்மாள் மடக்கி பிடித்தார். பிடிபட்ட வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் கணபதி (27), நெல்லையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வேறு எங்கும் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளாரா?. அவருடைய கூட்டாளிகள் யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை நகர பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை அந்த பெண்ணே சண்டையிட்டு பிடித்து போலீசில் ஒப்படைத்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story