கூடலூர் சளிவயலில் குடிநீர் கிணறு தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கூடலூர் சளிவயலில் குடிநீர் கிணறு தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் சளிவயலில் உள்ள குடிநீர் கிணறு தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் சளிவயல் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நகராட்சி மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கிணறு அமைக்கப்பட்டது. கிணற்று நீரை பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். கோடை வறட்சியிலும் வற்றாத கிணறாக அது உள்ளது.

இந்த நிலையில் கிணற்றின் அருகில் இரவில் போதை ஆசாமிகள் ஒன்றிணைந்து மது அருந்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போதை தலைக்கேறியதும் காலி மதுபாட்டில்கள் மற்றும் குப்பை கழிவுகளை ஆசாமிகள் கிணற்றுக்குள் வீசி எறிகின்றனர். இதனால் கிணற்றுக்குள் குப்பை கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் கூடலூர் பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு விசுவரூபம் எடுத்து வரு கிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குறிப்பாக கூடலூர் சளிவயலில் உள்ள கிணற்றை தூர்வாரினால் குடிநீர் பிரச்சினை அப்பகுதியில் எழ வாய்ப்பு இல்லை. இதனை கருத்தில் கொண்டு கிணற்று நீரை பயன்படுத்தும் வகையில் சுகாதார பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சளிவயல் பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் போதை ஆசாமிகளால் குடிநீர் கிணற்று நீர் மாசு அடைந்து வருகிறது. இதனால் கிணற்று நீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கிணற்றை தூர்வாரி, அதனருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டினால் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

Next Story