மரக்காணத்தில் வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
மரக்காணத்தில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மரக்காணம்,
தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் 2–வது இடத்தில் மரக்காணம் பகுதி உள்ளது. இங்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் ஆண்டுதோறும் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து புதுவை, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த தொழிலை நம்பி மரக்காணம் சுற்றுப்பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் அக்டோபர் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். ஆனால் பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
கடந்த மாதம் 2–வது வாரத்தில் உப்பு உற்பத்தி பணி தொடங்கியது. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இப்பகுதியில் தற்போது அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் உப்பளங்களில் நிரப்பப்படும் கடல் நீர், விரைவில் ஆவியாகி உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
வழக்கமாக ஏப்ரல், மே மாதம் உற்பத்தியாகும் அளவில் தற்போது உப்பு உற்பத்தியாகிறது. இவை உடனுக்குடன் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால், உப்பளங்களில் பாதுகாப்பாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி அதிகரிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உப்பு ரூ.120 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.