நடிகை சுமலதா பற்றி மந்திரி எச்.டி.ரேவண்ணா சர்ச்சை கருத்து: முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டார்


நடிகை சுமலதா பற்றி மந்திரி எச்.டி.ரேவண்ணா சர்ச்சை கருத்து: முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நடிகை சுமலதா பற்றி மந்திரி எச்.டி.ரேவண்ணா சர்ச்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு, முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டார்.

பெங்களூரு, 

நடிகை சுமலதா பற்றி மந்திரி எச்.டி.ரேவண்ணா சர்ச்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு, முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டார்.

மண்டியாவில் கடும் எதிர்ப்பு

நடிகை சுமலதா, நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா, “கணவர் இறந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவரது மனைவி சுமலதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா?” என்று கூறினார்.

மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் குறிப்பாக மண்டியா தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெரும் அதிர்ச்சி

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்களே, நடிகை சுமலதாவுக்கு ஓட்டுப்போடுவோம் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள். இது ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமி வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று குமாரசாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சுமலதா பற்றி மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறிய கருத்துக்காக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மன்னிப்பு கேட்கிறேன்

நடிகை சுமலதா பற்றி மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறிய கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் எச்.டி.ரேவண்ணா சார்பில் நான் இந்த மன்னிப்பை கேட்கிறேன்.

எங்கள் குடும்பம், சாமானிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை செய்யாது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்து வந்திருக்கிறேன்.

சிறப்பு விசாரணை குழு

இதுபற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மந்திரி எச்.டி.ரேவண்ணா பேசும்போது, எச்சரிக்கையுடன் பேசி இருந்தால் சர்ச்சை ஏற்பட்டு இருக்காது. ஊடகங்கள் சென்று அவரிடம் கருத்து கேட்டபோது, அவர் வாய் தவறி கருத்து தெரிவித்துவிட்டார்.

மண்டியா தொகுதி விஷயத்தில் ஊடகங்கள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. குதிரை பேர விவகாரத்தில் வெளியான ஆடியோ உரையாடல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும். 15 நாட்கள் தாமதமானால் என்ன ஆகிவிடும்.

கவலைப்பட தேவை இல்லை

இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள். ஆளுங்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரமேஷ் ஜார்கிகோளியை பா.ஜனதாவை சேர்ந்த சிவன்னகவுடா நாயக் சந்தித்து பேசியது பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. எனக்கும், ரமேஷ் ஜார்கிகோளிக்கும் இடையே உள்ள நல்லுறவு நன்றாகவே உள்ளது.

கவனம் செலுத்துகிறேன்

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நான் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story