நாடாளுமன்ற தேர்தல்: பா.ஜனதாவின் தோல்வி ஜனநாயகத்தின் வெற்றி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கருத்து
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்றால் அது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்றால் அது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதன் விவரம் வருமாறு:-
நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அமைதியாக தேர்தலை நடத்த பொறுப்பு ஏற்றுள்ள அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
பதில் அளிக்கும் தேர்தல்
வருகிற நாடாளுமன்ற தேர்தல் பாசிசத்துக்கு எதிராக போராடுவதற்கான வாய்ப்பு ஆகும். இந்த தேர்தலில் பா.ஜனதா தோற்றால் அது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த தேர்தல் பொய்யான வாக்குறுதிகளுக்கும், ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலுக்கும், சமூக மோதல்களுக்கும், ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கும், இளைஞர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இருக்கும்.
விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கும், நெறிமுறையற்ற முறையில் சுப்ரீம் கோர்ட்டை அணுக முயன்ற தற்கும், சி.பி.ஐ. உள்ளிட்ட பிற விசாரணை அமைப்புகளை தவறாக கையாண்டதற்கும் பதில் அளிக்கும் வகையில் அமையும்.
ஜனநாயகம் வெற்றிபெற விரும்புகிறேன்
இந்த தேர்தல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் பிற கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. ராகுல்காந்தி, நரேந்திர மோடிக்கு இடையே நடக்கும் போட்டியும் இல்லை.
ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். நான் ஜனநாயகம் வெற்றிபெற விரும்புகிறேன். எனவே நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடக்கவும், ஜனநாயகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.
Related Tags :
Next Story