கம்பம் பகுதிகளில் வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடை தீவன பயிர்களை பாதுகாப்பதில் விவசாயிகள் தீவிரம்
கம்பம் பகுதிகளில் வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடை தீவன பயிர்களை பாதுகாப்பதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பகுதி மக்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மேலும் பண்ணைகள் மற்றும் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதிகளில் நெல் விவசாயம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. அறுவடை காலங்களில் கிடைக்கக்கூடிய வைக்கோலை விவசாயிகள் சேமித்து வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் மழை இல்லாமல் கடும் வெயிலின் காரணமாக கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழக பகுதிகள் மட்டுமல்லாமல், கேரளாவிலும் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கம்பம், கே.கே பட்டி, கே.எம் பட்டி, ஊத்துக்காடு ஆகிய பகுதிகளில் கால்நடைகளுக்காக தீவன பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். அவை தண்ணீரின்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கிணற்றில் உள்ள குறைந்த தண்ணீரை தெளிப்புநீர் பாசனத்தின் மூலம் பயன்படுத்தி கால்நடை தீவனங்களான அகத்திக்கீரை, கம்பு, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த தீவனங்களை தேனி மாவட்டத்தில் பிற ஊர்களில் இருந்து மட்டுமில்லாமல், கேரள மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் வந்து கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். அவை லாரிகளின் மூலம் கேரள மாநிலம் எர்ணாகுளம், சங்கனாச்சேரி ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் கொண்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story