அஞ்சுகோட்டை அங்கன்வாடி மையம் முன்பு குழாயில் உடைப்பால் குளம்போல் தேங்கி நிற்கும் குடிநீர்


அஞ்சுகோட்டை அங்கன்வாடி மையம் முன்பு குழாயில் உடைப்பால் குளம்போல் தேங்கி நிற்கும் குடிநீர்
x
தினத்தந்தி 10 March 2019 9:48 PM GMT (Updated: 10 March 2019 9:48 PM GMT)

அஞ்சுகோட்டை அங்கன்வாடி மையம் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது.

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 40–க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்தின் முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்வதில் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒருவித அச்சத்துடன் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

மையத்தின் நுழைவு வாயில் முன்பு தண்ணீர் தேங்கிக்கிடப்பதால் குழந்தைகளுக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தினமும் நாட்களை நகர்த்தி வருகின்றனர். இந்த குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த இடத்தில் தண்ணீர் வீணாகி வருவதுடன் குளம்போல் தேங்கி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:– அஞ்சுகோட்டை அங்கன்வாடி முன்பு கடந்த 6 மாதகாலமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி குளம்போல காட்சிஅளிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனை உடனடியாக சரி செய்து தரவேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர் இந்த மையத்திற்கு வரும் குழந்தைகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அஞ்சுகோட்டை அங்கன்வாடி முன்பு உள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து தரவேண்டும். மேலும் தண்ணீர் தேங்கி கிடக்கும் குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story