நீச்சல்தெரியாத நிலையில் பிளாஸ்டிக் கேனை பிடித்தபடி கிணற்றில் குளித்த என்ஜினீயர் சாவு பிடி நழுவியதால் தண்ணீரில் மூழ்கினார்
நண்பரின் சகோதரி திருமணவிழாவுக்கு வந்த என்ஜினீயர் பிளாஸ்டிக் கேன் உதவியுடன் கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
ராஜபாளையம்,
சென்னையை சேர்ந்த பழனி என்பவரது மகன் கணேசன் (வயது24) என்ஜினீயரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரிந்து வந்தார். இவருடன் பிரபாகரன் என்பவரும் வேலை செய்தார். இதனால் இருவரும் நண்பர்கள் ஆயினர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் உள்ள பிரபாகரனின் சகோதரி திருமண விழாவில் கலந்து கொள்ள கணேசன் வந்திருந்தார்.
திருமண விழாவுக்கு வந்த கணேசன் அச்சங்குளம் கண்மாய் அருகே தனியார் கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத நிலையில் பிளாஸ்டிக் கேன் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டதால் அதனை கையில் பிடித்தபடி கிணற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிளாஸ்டிக் கேன் கை நழுவி விட்டது. இதில் கணேசன் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.