திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,314 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,314 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திண்டுக்கல்,
இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோயை ஒழிக்கும் வகையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது.
இதற்காக திண்டுக்கல்லை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 1,314 மையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ஊட்டச்சத்து மையங் கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதுதவிர 29 நடமாடும் குழுக்கள், 50 போக்குவரத்து குழுக்கள் அமைத்தும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட மையத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது கலெக்டர் டி.ஜி.வினய் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதேபோல் நத்தம் பகுதியில் வத்திப்பட்டி, செந்துறை, சிறுகுடி, கோசுகுறிச்சி, உலுப்பகுடி உள்ளிட்ட 112 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதனை நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், மருத்துவ குழுவினர், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். பழனி வட்டாரத்தில் 89 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சி கமிஷனர் தேவிகா, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுபா, அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணியில் 5 ஆயிரத்து 426 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story