நத்தம் அருகே, கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் ரூ.1 கோடி நகை-பணம் தப்பியது


நத்தம் அருகே, கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் ரூ.1 கோடி நகை-பணம் தப்பியது
x
தினத்தந்தி 11 March 2019 4:15 AM IST (Updated: 11 March 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். வங்கியில் அலாரம் ஒலித்ததால் ரூ.1 கோடி நகை-பணம் தப்பியது.

செந்துறை,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள மங்களப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு வேளையில் மர்ம நபர்கள் வங்கிக்கு வந்தனர்.

பின்னர் வங்கியின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர். மேலும் வங்கி ஷெட்டர் கதவில் பொருத்தப்பட்டிருந்த 2 பூட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பிறகு உட்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் வயர்களை துண்டிக்க முயன்றனர். அப்போது வங்கியில் உள்ள அலாரம் திடீரென ஒலித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடினர். ஆனால் கூட்டுறவு வங்கி ஊருக்கு வெளிப்பகுதியில் இருப்பதால் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், கூட்டுறவு வங்கி பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் கூட்டுறவு வங்கி நிர்வாகிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வங்கிக்குள் சென்று லாக்கரில் உள்ள நகை, பணத்தை சரிபார்த்தனர்.

அப்போது லாக்கரில் வைத்திருந்த ரூ.1 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நகைகளும், ரூ.21 ஆயிரத்து 165 பாதுகாப்பாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்லா, திவான்மைதீன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கியில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர்.

மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. அது, வங்கியில் இருந்து மோப்பம் பிடித்தப்படி கலையரங்கம் வரை ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும், அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story