கொள்முதல் விலையை உயர்த்தி நலிந்து வரும் பால் பண்ணை தொழிலை காப்பாற்ற வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை


கொள்முதல் விலையை உயர்த்தி நலிந்து வரும் பால் பண்ணை தொழிலை காப்பாற்ற வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 March 2019 3:55 AM IST (Updated: 11 March 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி பகுதியில் நலிந்து வரும் பால் பண்ணை தொழிலை காப்பாற்ற பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் தொடர்ந்து பருவமழை பொய்த்து வருவதால் கண்மாய், ஊருணிகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாய தொழில் நடைபெறாததால் பல விவசாயிகள் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட பால் பண்ணைகள் உள்ளன. இந்த பால்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பாலை மதுரை ஆவினுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பால் கொள்முதல் விலை ரூ.26 என்று அரசு நிர்ணயித்தது. அதன்பிறகு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் மாட்டுத்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துவிட்டது. ஆனால் பால் கொள்முதல் விலையை மட்டும் அரசு உயர்த்தவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் புல், பூண்டுகளும் கருகிவிட்டன. இதனால் பசுந்தீவனம் பால் மாடுகளுக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் பருவமழை பொய்த்துவிட்டதால் நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே பால் மாடுகளுக்கு உலர் தீவனமான வைக்கோல் கூட கிடைக்கவில்லை. இதனால் வெளியூர்களில் வைக்கோலை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து தங்களுடை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் உசிலம்பட்டி பகுதி மக்கள் பால்மாடுகளை வளர்த்து வரும் சூழ்நிலையில் பால் கொள்முதல் விலையை மட்டும் ஆவின் நிர்வாகம் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

எனவே தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் பால்மாடுகளை வளர்க்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு மாட்டு தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் உலர் தீவனமான வைக்கோலை அரசு மானிய விலையில் வழங்கியதை போன்று இந்த ஆண்டும் வைக்கோலை மானிய விலையில் வழங்க வேண்டும். அத்துடன் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இல்லையென்றால் கொஞ்சம், கொஞ்சமாக நலிந்து வரும் பால் பண்ணை தொழில் விரைவில் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் இன்பராஜா கூறும்போது, பால் மாடுகளுக்கு தேவையான இடுபொருட்களின் விலை கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால் பால் விலை மட்டும் உயரவில்லை. பால் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவிற்கு அரசு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். அத்துடன் மானிய விலையில் வழங்கப்படும் வைக்கோலை கால்நடை மருத்துவமனை மூலமாக வழங்காமல் அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் மூலம் வழங்கினால் உண்மையான பால் மாடுகள் வளர்த்து பண்ணைகளுக்கு வழங்குவோருக்கு அது போய் சேரும். எனவே உசிலம்பட்டி பகுதி மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் பால் மாடு வளர்க்கும் தொழிலை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் தமிழக அரச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story