5 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


5 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 10 March 2019 10:45 PM GMT (Updated: 10 March 2019 10:29 PM GMT)

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 85 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் என பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பணியில் 7,412 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு கலெக்டர் நடராஜன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பிரேமலதா பேட்டியை நான் முழுமையாக கருத்து கேட்கவில்லை. எனவே அதுபற்றி கருத்து கூற முடியாது. மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் 5 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதுரை மாநகருக்குள் வெளியூர் பஸ்கள் வராத அளவிற்கு சுற்றுப்பாதை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

இதேபோல் வாடிப்பட்டியை அடுத்த கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம், பஸ் நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நடந்தது. இந்த முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் ஹரி பிரசாத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலூர் பஸ் நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கிவைத்தார்.


Next Story