தண்ணீரின்றி வறண்டதால் மேய்ச்சல் நிலமாக மாறிய குடகனாறு அணை
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணை தண்ணீரின்றி வறண்டதால் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
வேடசந்தூர்,
பழனி மலையின் கிழக்கு கோடி அடிவாரத்தில் தொடங்கி குடகனாறு ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர் வழியாக பயணித்து கரூர் மாவட்டம் மூலப்பட்டி என்ற இடத்தில் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதில் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் குடகனாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.
மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு மற்றும் மான்கோம்பையாறு உள்ளிட்ட சிற்றாறுகள் முக்கிய நீர்வரத்தாக குடகனாற்றுக்கு உள்ளது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர அணையை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய அளவில் பருவமழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் 27 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 4 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதன்பிறகு மழை பெய்யாததால் அணை தற்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் தற்போது ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக அணை மாறியுள்ளது.
இதன்காரணமாக இந்த ஆண்டு அணையை சுற்றியுள்ள கிராம பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இதை பயன்படுத்தி அணையை தூர்வார வேண்டும். மேலும் பழுதாகி உள்ள 5 ஷெட்டர்களை அகற்றிவிட்டு புதிய ஷெட்டர்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story