கூடலூர் அருகே, தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டியானை - வனத்துறையினர் விசாரணை


கூடலூர் அருகே, தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டியானை - வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 6:45 PM GMT)

கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. வனப்பகுதியில் காட்டுயானை, மான், கரடி, புலி, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. தற்போது வறட்சி நிலவுவதால், நீர்நிலைகள் வறண்டு விட்டன. வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

காட்டுயானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ பசுந்தீவனம் தின்னும் என கணக்கெடுப்பு கூறுகிறது. ஆனால் அதற்கு ஏற்ப தற்போது தீவனங்கள் கிடைப்பது இல்லை. இதேபோன்று நீர்நிலைகள் வறண்டு விட்டதால் போதிய குடிநீர் கிடைக்காமல் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் காட்டுயானைகள் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 டிவிஷன் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானைகள் பிளிறியவாறு முகாமிட்டு நின்றிருந்தன.

இதுகுறித்து நேற்று வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் கூடலூர் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதை சுற்றி மற்ற காட்டுயானைகள் நின்றிருந்தன. உடனே அந்த காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வன காப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் குட்டியானையின் உடலை கைப்பற்றினர். அப்போது இறந்து கிடந்தது 1 வயது ஆண் குட்டியானை என்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் நந்தினி வரவழைக்கப்பட்டு, குட்டியானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதே பகுதியில் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது. குட்டியானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story