சோழவரத்தில் உருக்காலையை மூடக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


சோழவரத்தில் உருக்காலையை மூடக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 12 March 2019 4:00 AM IST (Updated: 12 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

உருக்காலையை மூடக்கோரி சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி,

பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பாடியநல்லூர் காலனி பஜனை கோவில். இப்பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அலுமினிய உருக்காலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளிவருவதால், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கண் எரிச்சல் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் அலுமினிய துகள்கள் காற்றில் பறந்து குடிநீரில் கலக்கிறது. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்களால் துர்நாற்றமும் வீசுகிறது.

எனவே உருக்காலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கக்கோரி சோழவரம் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஒன்றிய ஆணையாளர் தேர்தல் பணிக்காக வெளியே சென்று உள்ளதாகவும், அவரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story