மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம் - புதுப்பேட்டை அருகே பரபரப்பு


மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம் - புதுப்பேட்டை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 8:16 PM GMT)

புதுப்பேட்டை அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள ஒறையூர் காலனியை சேர்ந்தவர் வேலு மகன் கதிர்(வயது 17). இவர் 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வாணியம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த கனிஷ்கா(3) மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த குழந்தை கனிஷ்கா, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கதிர், நல்லூர்பாளையம் கருமகாரிய கொட்டகை அருகே ஆலமரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கதிர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அடித்துக் கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் நேற்று முன்தினம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர்.

இதனிடையே பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலையில் பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் கதிரின் உடல், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கதிரின் உடல் ஒறையூருக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் உறவினர்கள், ஒறையூர் காலனி பொதுமக்கள் திடீரென கதிரின் உடலை ஒறையூர்-கரும்பூர் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கதிரை கொன்று தூக்கில் தொங்க விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கதிரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் சப்-கலெக்டர் சரயூ, பண்ருட்டி தாசில்தார் கீதா மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், இறந்த கதிரின் தங்கையான கல்கிக்கு(19) அரசு வேலையும், 9-ம் வகுப்பு படித்து வரும் மற்றொரு தங்கை கலைமதியின்(14) விடுதி செலவை அரசு ஏற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கதிர் இறந்தது தொடர்பாக காவல் துறை மூலம் தீவிர விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் கதிரின் உடல், அடக்கம் செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் ஒறையூர்-கரும்பூர் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story