தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் எதிரொலி: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் எதிரொலி: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 12 March 2019 4:30 AM IST (Updated: 12 March 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்ததால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெறும். இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் அளிப்பார்கள்.

அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இந்த கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடன், கஜா புயல் நிவாரணம், புதிய ரேஷன் கார்டு என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளிப்பார்கள். இதனால் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படும். சில நேரங்களில் மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறும்.

இதனால் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரும் ஏராளமாக குவிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களை சோதனை செய்த பின்னரே மனுக்கள் அளிக்க அனுமதிப்பார்கள். இது தவிர தீயணைப்பு படையினரும் அங்கு வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான நோட்டீசுகள் கலெக்டர் அலுவலகத்தில் ஆங்காங்கே ஒட்டி வைக்கப்பட்டு இருந்தன. அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் பணிகள் நிறைவு பெறும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வழக்கம் போல ஏராளமான பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தனர். குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் மனுக்களை எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு விட்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

அதன்படி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு விட்டு சென்றனர். கூட்டம் நடைபெறும் அறை பூட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். 

Next Story