மைசூரு-குடகு தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் பேட்டி


மைசூரு-குடகு தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 10:30 PM GMT (Updated: 11 March 2019 8:50 PM GMT)

மைசூரு-குடகு தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் தெரிவித்தார்.

மைசூரு,

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் தலா 14 தொகுதிகள் என இரு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதாவது ஏப்ரல் 18 மற்றும் 23-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் மைசூரு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அபிராம் ஜி.சங்கர் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதியில் மடிகேரி, விராஜ்பேட்டை, பிரியப்பட்டணா, சாமராஜா, கிருஷ்ணராஜா, சாமுண்டீஸ்வரி, உன்சூர், நரசிம்மராஜா ஆகிய 8 சட்டசபை தொகுதிகளை உள்ளடங்கியுள்ளது. அதுபோல் மைசூரு மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர் சட்டசபை தொகுதி மண்டியா நாடாளுமன்ற தொகுதியிலும், எச்.டி.கோட்டை, நஞ்சன்கூடு, டி.நரசிப்புரா, வருணா ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் சாம்ராஜ்நகர் நாடாளுமன்ற தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

இதில் மைசூரு-குடகு, மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வருகிற 26-ந்தேதி கடைசிநாளாகும். 27-ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், 29-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணியும் நடக்கிறது.

மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 24 லட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளன. பொதுமக்கள் வாக்களிக்க வசியாக 2,044 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு தனி வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், இருக்கை வசதி, கழிவறை, மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே வாக்குச்சாவடி மையங்கள் செயல்படும் கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால், அங்கு சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் பற்றி வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய, கழக தலைவர்கள், மேயர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அரசு வாகனங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து வருகிறார்கள். தேர்தல் கண்காணிப்பு பணிக்காக 59 குழுக்கள் அமைக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை முறை அமலுக்கு வந்துவிட்டதால், வீதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்-அவுட், சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

மிகவும் பதற்றமான மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். அனுமதி பெற்று துப்பாக்கி வாங்கியுள்ளவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை ஆன்-லைன் மூலமாகவும், செல்போன் எண்கள் மூலமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் கே.டி.பாலகிருஷ்ணா கூறியதாவது:-

மைசூரு மாநகர எல்லைக்குள் 987 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு பாதுகாப்பு பணிக்காக 1,543 போலீசார் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது குதிரைப்படையினர், கர்நாடக ஆயுதப்படை, துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மைசூரு மாவட்டத்தில் மொத்தம் 1,010 ரவுடிகள் உள்ளனர். இதில் குற்ற வழக்குகளில் கைதாகி 69 ரவுடிகள் சிறையில் உள்ளனர். மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 765 பேரிடம், தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைக்கும்படியும், ஏதாவது அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 95 பேர் மைசூரு மாநகரில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மைசூரு தொகுதியில் தேர்தலை அமைதியாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். உடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்சிங் இருந்தார்.

Next Story