நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை: கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் வெகுவாக குறைகிறது


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை: கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் வெகுவாக குறைகிறது
x
தினத்தந்தி 12 March 2019 3:15 AM IST (Updated: 12 March 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால்கோடை காலத்தில்குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மண்டியா,

கர்நாடகம்-தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை திகழ்கிறது. இந்த அணை மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும்.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லை. மேலும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 102.23 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராமநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்திற்கும் என மொத்தம் வினாடிக்கு 3,600 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 113 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

இதே நிலை நீடித்தால் ஏப்ரல், மே மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கே.ஆர்.எஸ். அணை நீர்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு (2018) ஏப்ரல் 11-ந்தேதி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 87.69 அடியாக இருந்தது. ஆனால் தற்போது 102.23 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட தற்போது மழை பொழிவு குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. கே.ஆர்.எஸ். அணையில் 45.05 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் இருப்பு வைக்கலாம். தற்போது அணையில் 20.24 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story