நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் கூட்டம்: மந்திரி டி.கே.சிவக்குமார் மீது மேலிட பொறுப்பாளரிடம் மண்டியா காங்கிரசார் புகார்


நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் கூட்டம்: மந்திரி டி.கே.சிவக்குமார் மீது மேலிட பொறுப்பாளரிடம் மண்டியா காங்கிரசார் புகார்
x
தினத்தந்தி 12 March 2019 4:15 AM IST (Updated: 12 March 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் கூட்டம் நடத்திய மந்திரி டி.கே.சிவக்குமார் மீது கட்சி மேலிட பொறுப்பாளரிடம் மண்டியா காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஏப்ரல் 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இன்னும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்குவது உறுதி என்று சித்தராமையா ஏற்கனவே அறிவித்துவிட்டார். அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் எதிர்பார்த்திருந்த நடிகை சுமலதா, மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட சுமலதா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மண்டியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சென்ற இடமெல்லாம் அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. இதனால் ஜனதா தளம்(எஸ்) சற்று கலக்கம் அடைந்துள்ளது.மண்டியாவில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகளும் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கூட்டணி இருந்தாலும் காங்கிரஸ் ஓட்டுகள் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு கிடைக்காத நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் மந்திரி டி.கே.சிவக்குமார், மண்டியாவுக்கு சென்று அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். கூட்டணி தர்மத்தை காக்கும் ெபாருட்டு, கருத்து வேற்றுமைகளை மறந்து, மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த கூட்டம் நடத்துவது குறித்து கட்சியின் தலைவர்கள் யாருக்கும் டி.கே.சிவக்குமார் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், இதுகுறித்து மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலிடம் மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சி அனுமதி இல்லாமல் மண்டியா நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியது ஏன்? என்பது குறித்து புகார் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story