குமரி மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 18 பறக்கும் படை- கண்காணிப்பு குழு கலெக்டர் பேட்டி


குமரி மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 18 பறக்கும் படை- கண்காணிப்பு குழு கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2019 4:30 AM IST (Updated: 12 March 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முறைகேடுகளை தடுக்க குமரி மாவட்டத்தில் 18 பறக்கும் படை மற்றும் 18 நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும், 6 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை 20 லட்சத்து 4 ஆயிரத்து 814 ஆகும். கடந்த 31-1-2019 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இது மக்கள்தொகையின் அடிப்படையில் 73 சதவீதம் ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடையும் வரையில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு கொண்டிருக்கும். இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் வாங்கப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்படும். இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் இருந்தால் அவர்கள்கூட மனு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் 1694 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நாங்கள் செய்துள்ளோம். மேலும் சில வாக்குச்சாவடிகளுக்கு மின்விளக்கு வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள நடைபாதை போன்ற வசதிகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றையும் சரிசெய்வதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளோம்.

இந்த தேர்தலை ஒருங்கிணைப்பு செய்வதற்காக மாவட்ட அளவில் 18 வருவாய் அதிகாரிகள், முதுநிலை துணை கலெக்டர்கள், கூடுதல் கலெக்டர்கள் அந்தஸ்தில் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியும் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 6 சட்டசபை தொகுதிகளும் 117 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 117 மண்டலங்களுக்கும் மண்டல அளவிலான குழுக்களும் அமைத்துள்ளோம். 12 ரிசர்வ் மண்டல குழுக்களும் அமைத்துள்ளோம். இவர்களுடைய முக்கியமான வேலை வாக்குச்சாவடிகளை பார்வையிடுவது, அவற்றில் என்னென்ன பராமரிக்கப்பட வேண்டும் என்பதை கவனிப்பது, வாக்குப்பதிவு அன்று வாக்குப்பதிவு அலுவலர்களை அழைத்துச் செல்வது, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தப்படுவதை பார்வையிடுவது, வாக்குப்பதிவு முடிந்தபிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி கொண்ட எந்திரம் ஆகியவற்றை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வது போன்றவையாகும்.

நேற்று (நேற்று முன்தினம்) தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளை தடுக்க 6 சட்டசபை தொகுதிகளில் 18 பறக்கும் படைகளை அமைத்துள்ளோம். 6 சட்டமன்ற தொகுதிகளில் 8 மணி நேரத்துக்கு ஒரு பறக்கும் படை என்ற அடிப்படையில் மொத்தம் 18 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான சாலைகள், சோதனைச் சாவடிகள் போன்றவற்றில் இவர்கள் ஆய்வு மற்றும் வாகன சோதனைகளை மேற்கொள்வார்கள். 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேமாதிரி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு கணக்கு குழு வீதம் 6 தொகுதிக்கும் 6 கணக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கண்காணிப்பு குழுக்களும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் அனைத்தும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ள 2 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும். குமரி மாவட்ட அளவில் கண்காணிப்பு அதிகாரியாக கூடுதல் கலெக்டர் இருப்பார். சட்டம்- ஒழுங்கு கண்காணிப்பு அதிகாரியாக மாவட்ட வருவாய் அதிகாரி இருப்பார்.

மேலும் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 552 பேர் வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுத்துறை பணியாளர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி விரைவில் தொடங்கும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும் வி.வி.பேட் என்ற கருவியுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நமது மாவட்டத்தில் போதிய அளவு இருக்கிறது. குமரி மாவட்டத்துக்கு தேவையான 1923 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்மிடம் உள்ளது. கூடுதலாக 150 வி.வி.பேட் கருவி நமக்கு அனுப்பி உள்ளனர். இதன் முதல்கட்ட பரிசோதனையை நாம் முடித்துள்ளோம்.

எந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எந்த வாக்குச்சாவடிக்கு செல்கிறது? என்பதும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் யார், யார்? எந்த வாக்குச்சாவடிக்கு பணிக்கு செல்கிறார்கள்? என்பதும் கடைசி நாள் வரை தெரியாது. தேர்தலை சிறப்பாகவும், வெளிப்படைத் தன்மையாக வாக்குப்பதிவை நடத்தவும் இது உதவியாக இருக்கும். தேர்தல் பார்வையாளர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பாக இங்கு வந்து பணியைத் தொடங்குவார்கள். அதேபோல் செலவுக்கணக்கு பார்வையாளர்களும் வந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

மாவட்டத்தில் மொத்தம் 48 இடங்களில் உள்ள 208 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். மைக்ரோ பார்வையாளர்களும் இங்கு கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் புதிதாக எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. ஏற்கனவே உள்ள திட்டங்கள் தொடரும். புதிதாக எந்த பயனாளிகள் தேர்வும் செய்ய முடியாது. புதிய கட்டுமானப்பணிகள் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை தொடரலாம். எந்த டெண்டரும் இப்போது வைக்க முடியாது. அத்தியாவசிய தேவையாக இருப்பின் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுத்தான் டெண்டர் வைக்க முடியும். எந்த வேலை ஆணையும் புதிதாக வழங்க முடியாது. எந்த ஒப்பந்தமும் புதிதாக போட முடியாது. ரூ.2 ஆயிரம் திட்டத்துக்கு ஏற்கனவே பயனாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும். புதிதாக வழங்க முடியாது. புதிதாக பயனாளிகளை சேர்க்க முடியாது. பிரதம மந்திரி திட்டமாக இருந்தாலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கான ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி புதிதாக பயனாளிகளை சேர்க்க முடியாது.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி உடன் இருந்தார். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

முன்னதாக தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே தலைமையில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்), சரண்யா அறி (பத்மநாபபுரம்), பிரதீக் தயாள் (பயிற்சி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகன்யா (பொது) ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story