வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு: நிர்மலாதேவியிடம் இன்று, ஐகோர்ட்டு நீதிபதிகள் தனி அறையில் விசாரணை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவு
பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு மீது நேற்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது, இது சம்பந்தமாக நிர்மலாதேவியிடம் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்த நீதிபதிகள், அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகளின் தனி அறையில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
மதுரை,
ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. பலரை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் உள்நோக்கம் உள்ளது. எனவே நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிர்மலாதேவி சார்பில் ஆஜரான வக்கீல், “சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிர்மலாதேவியை சந்திக்க முடியவில்லை. அவருக்கு தேவையான சட்ட உதவிகளையும் வழங்க முடியவில்லை. இதன் காரணமாக, அவர் ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை உள்ளது“ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது?” என அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, “நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்குவதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இந்த வழக்கில் கோர்ட்டு எடுக்கும் முடிவுக்கு அரசு ஒத்துழைக்கும்“ என தெரிவித்தார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு சம்பந்தமாகவும், நிர்மலாதேவியின் மனநிலையை அறிந்து கொள்வதற்காகவும், அவருடைய ஜாமீன் மனுவை விசாரிப்பது தொடர்பாகவும் சிறையில் உள்ள அவரிடம் விளக்கங்கள் பெற வேண்டியுள்ளது.
எனவே அவரை நாளை (அதாவது இன்று) மதியம் 2.15 மணியளவில் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அவரிடம் நீதிபதிகளின் தனி அறையில் விசாரணை நடக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story